கிருஷ்ணகிரியில், ரூ.2½ லட்சம் குட்கா கடத்திய வேன் விபத்தில் சிக்கியது - டிரைவரிடம் போலீசார் விசாரணை
கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ரூ.2½ லட்சம் குட்கா கடத்திய வேன் விபத்தில் சிக்கியது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை சாலையில் உள்ள திருவண்ணாமலை ஜங்ஷன் மேம்பாலம் அருகே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில், நேற்று முன்தினம் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டிரைவர் லதிப்கான் (வயது 25) என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் டிரைவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய வேனை, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் வேனில் போலீசார் சோதனை செய்த போது, அட்டை பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து, 60 ஆயிரம் மதிப்பிலான குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வாணியம்பாடிக்கு குட்கா கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டிரைவர் லதிப்கான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story