வேப்பனப்பள்ளி அருகே, இளைஞர் விளையாட்டு மைதானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் - பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
வேப்பனப்பள்ளி அருகே இளைஞர் விளையாட்டு மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
வேப்பனப்பள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி ஊராட்சி சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் தலைமையில், ஊர் கவுண்டர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊராட்சிக்கு 2019-20-ம் நிதியாண்டுக்கான மாநில நிதியில் இருந்து விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டது. இந்த மைதானத்தை வனத்துறைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் அமைக்க உள்ளனர். இந்த பகுதியில் வன விலங்குகளால் ஆபத்தும், அந்த மைதானத்தின் மேல்பகுதியில் உயர்மின் அழுத்த மின்சார கம்பிகளும் செல்கிறது. அத்துடன் அந்த இடத்தில் தண்ணீர் வசதி இல்லை.
மேலும், விளையாட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்துள்ள இடத்திற்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் இடையே 3, 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. எனவே, ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் அங்கு செல்ல அச்சப்படுகிறார்கள். அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்தால் பயனற்றதாகி விடும்.
எனவே, தாங்கள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஊராட்சி மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இளைஞர் விளையாட்டு மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றி அதற்கு பதிலாக வேறு இடத்தை ஒதுக்க வேண்டும். மேலும் அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டு மைதானம் பயனுள்ளதாக இருக்கும் வகையில் அமைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story