பரமத்திவேலூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது


பரமத்திவேலூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2020 9:15 AM GMT (Updated: 2020-10-30T14:32:46+05:30)

பரமத்தி வேலூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). இவர், மோகனூர் சாலையில் சிலர் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டபோது தர மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் நேற்று இரவு மோகனூர் சாலையில் உள்ள ஒரு மீன் சில்லி கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது செல்போன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட பரமத்தி வேலூர் தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த நடேசன் மகன் தங்கமணிகண்டன் (29), அவரது சகோதரர் சந்தனகுமார் (25) மற்றும் நல்லியாம்பளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story