வேலூர் நேஷனல் சந்திப்பு அருகே ரூ.1½ கோடியில் பாலம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு


வேலூர் நேஷனல் சந்திப்பு அருகே ரூ.1½ கோடியில் பாலம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Oct 2020 11:45 AM GMT (Updated: 30 Oct 2020 11:35 AM GMT)

வேலூர் நேஷனல் சந்திப்பு அருகே ரூ.1 கோடியே 66 லட்சத்தில் பாலம் அமைப்பது குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்,

வேலூர் நேஷனல் சந்திப்பில் இருந்து சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் செல்லும் வழியில் சிறுபாலம் காணப்படுகிறது. இந்த பாலம் பழுதடைந்து காணப்படுவதால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுபாலத்தை அகற்றி அதே இடத்தில் 20 மீட்டர் அகலத்தில் ரூ.1 கோடியே 66 லட்சத்தில் புதிதாக பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சிறுபாலம் அமைந்துள்ள இடத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிதாக பாலம் அமைப்பது குறித்தும், அந்த பகுதியில் காணப்படும் குடிநீர் குழாய், மின்கம்பங்கள் மாற்றுவது பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவற்றை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாலத்தின் அருகே காணப்படும் அணுகு சாலையின் மழைநீர் கால்வாய்களை அகற்றி, சாலை மட்ட அளவில் புதிதாக கால்வாய் அமைக்கப்படும் என்றும், அதன் மேலே வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள், கலெக்டரிடம் விளக்கி கூறினர்.

அதைத்தொடர்ந்து அப்துல்லாபுரம் விமான நிலையத்தையொட்டி ரூ.1 கோடியே 66 லட்சத்தில் மாற்றுச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். சாலை பணிகளை 15 நாட்களுக்கு முடித்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர் குடியாத்தம் ரெயில்வே சாலை முதல் ராஜா கோவில் சேத்துவாண்டை வரை ரூ.1 கோடியே 47 லட்சத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நடைபெற்று வரும் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள காங்குப்பம்-பெருமாங்குப்பம் சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி கோட்டப் பொறியாளர்கள் அண்ணாமலை (வேலூர்), சுகந்தி (காட்பாடி), வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன், தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story