சாஸ்தா கோவில் அணையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


சாஸ்தா கோவில் அணையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2020 5:30 PM IST (Updated: 30 Oct 2020 5:12 PM IST)
t-max-icont-min-icon

சாஸ்தா கோவில் அணையை திறக்க வலியுறுத்தி சேத்தூர் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தளவாய்புரம், 

சேத்தூர் அருகே 10 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 43 அடி ஆகும். இது தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது.

இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து வெளியேறும் நீர் 8 கண்மாய் பகுதிகளுக்கு பாசனத்துக்கு செல்வதால் 50 ஹெக்டேர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயனடையும். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் நெல் பயிரை பயிரிட்டுள்ளனர்.

எனவே இந்த அணைக்கட்டு பகுதியிலிருந்து நீரை பாசனத்திற்கு விரைவில் திறக்க வலியுறுத்தி சேத்தூர் அருகே உள்ள தேவதானம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் அம்மையப்பன் முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் ராமமூர்த்தி, வைரமுத்து, நகர குளம் கண்மாய் சங்க தலைவர் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராஜபாளையம் தாசில்தார் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை அதிகாரி ஜான்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாக சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் நவம்பர் மாதம் 5-ந் தேதிக்குள் பாசனத்துக்கு சாஸ்தா கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story