எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர் நியமனத்தை கண்டித்து காங்கிரசார் போராட்டம்; உருவ பொம்மை எரிப்பு


எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர் நியமனத்தை கண்டித்து காங்கிரசார் போராட்டம்; உருவ பொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2020 12:30 PM GMT (Updated: 2020-10-30T17:52:01+05:30)

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர் நியமனத்தை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.98 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ரூ.1.264 கோடியில் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினராக டாக்டர் சண்முகம் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரசார் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சண்முகம் சுப்பையாவின் உருவ பொம்மையை எரித்தும், சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். தகவல் அறியும் குழு இணைச்செயலாளர் சத்யன்சிவன், மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உருவ பொம்மை எரித்தது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story