கண்டமங்கலம் அருகே, பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - டிராக்டர் டிரைவர் கைது


கண்டமங்கலம் அருகே, பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - டிராக்டர் டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2020 6:15 PM IST (Updated: 30 Oct 2020 6:31 PM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயதுடைய மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளி விடுமுறை என்பதால் அந்த மாணவி தனது பெற்றோருடன் கண்டமங்கலம் அருகே முட்ராம்பட்டில் தங்கியுள்ளாள். அவளது பெற்றோர் அங்குள்ள செங்கல் சூளையில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார்கள். அதே செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக புதுச்சேரி மாநிலம் மணவெளி பனங்காட்டு தெருவை சேர்ந்த தங்கராசு மகன் பிரகாஷ் (37) என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அங்குள்ள தொழிலாளர்களிடம் கூறியுள்ளார். உடனே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக கூறிய பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். ஆனால் செல்லும் வழியில் முட்ராம்பட்டு ஏரிக்கரை அருகே உள்ள முட்புதருக்கு மாணவியை பிரகாஷ் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மாணவியை பிரகாஷ் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மாணவி, அழுதுகொண்டே வந்து நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story