சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3½ கோடி தங்கம் பறிமுதல் - 6 பேர் கைது
சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரூ.3½ கோடி தங்கம் கடத்திய 6 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை,
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு விமான சேவை கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் வெளிநாடுகளில் தவிப்பவர்களை மீட்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் சிறப்பு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி கடந்த 24-ந் தேதி சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்து இறங்கிய 6 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அவர்களை பிடித்து, அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்த அனைத்து பொருட்களையும் சோதனை செய்தனர். ஆனால் எந்த பொருளும் சிக்கி வில்லை. இதையடுத்து அவர்கள் அணிந்து இருந்த ஆடைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், அந்த 6 பேரும் தங்கத்தை பேஸ்ட்க்குள் (பசை) கலந்து, தங்களின் ஆடைகளின் உள்பகுதி மற்றும் உள் ஆடைகளில் ஒட்டியும், ஆசனவாயில் மறைத்தும் நூதனமுறையில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அவர்களிடம் இருந்த 6.88 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3 கோடியே 60 லட்சம் ஆகும்.
விசாரணையில் அவர்கள், நாசர் (வயது 35), தர்மராஜ் (40), சாகுல் அமீது (36), யுவராஜ், சாஜிப், பாட்ஷா என்பதும், சார்ஜாவில் கூலி வேலை செய்து வந்ததும், அங்கு இருந்து கோவைக்கு கமிஷன் அடிப்படையில் தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நாசர் என்ற பயணியை சோதித்த போது 2.1 கிலோ எடையிலான தங்கத்தை துகள்களாக அரைத்து, அதை 2 பிளாஸ்டிக் கவர்களில் மடித்து ஆணுறைக்குள் போட்டு ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். தர்மராஜ் என்பவர் 3 பாக்கெட்டில் 610 கிராம் தங்க துகள்களையும், சாகுல் அமீது 943 கிராம் தங்க துகள்களையும் ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தனர்.
யுவராஜ், பாட்ஷா, சாஜிப் ஆகியோர் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளில் தங்க துகள்களை பசைபோல் அரைத்து வேதிப்பொருட்களு டன் கலந்து ஒட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் கடத்தி வந்தது சுத்தமான தங்கம் என்பதால் அதன் மதிப்பும் அதிகம். பொதுவாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் தங்கத்தை கடத்தி வந்தால் அந்த நபர் கைது செய்யப்படுவார். தற்போது பிடிபட்ட 6 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 60 லட்சம் என்பதால் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்கத்தை ஆசனவாயில் கடத்தி வர பயிற்சி பெற்று உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.3½ கோடி தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story