பரபரப்பான அரசியல் சூழலில் உத்தவ் தாக்கரே- சரத்பவார் சந்திப்பு


பரபரப்பான அரசியல் சூழலில் உத்தவ் தாக்கரே- சரத்பவார் சந்திப்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 5:00 AM IST (Updated: 31 Oct 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார்.

மும்பை,

மராட்டிய மேல்-சபைக்கு கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்பட உள்ள 12 எம்.எல்.சி.க்களின் பட்டியலை கடந்த புதன்கிழமை மந்திரி சபை இறுதி செய்து உள்ளது. அந்த பட்டியல் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆனால் கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோல பலத்த மழை காரணமாக மராட்டியம் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளது. இதுதவிர வெங்காய விலை உயர்வு பிரச்சினை, வெங்காயம் இருப்பு வைத்து கொள்ள மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் எதிர்ப்பு, நடிகை கங்கனா ரணாவத்- சிவசேனா மோதல், டி.ஆர்.பி. மோசடி வழக்கு என பல்வேறு விவகாரங்களால் மராட்டியத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே வெங்காய விலை உயர்வு பிரச்சினை மற்றும் மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரணம் பெறுவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசுவேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று மாலை தென்மும்பையில் உள்ள முதல்-மந்திரியின் வர்ஷா பங்களாவில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. சந்திப்பில் மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து 2 பேரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

குறிப்பாக கங்கனா ரணாவத், டி.ஆர்.பி. மோசடி வழக்கு விவகாரங்களை எப்படி கையாள்வது என முதல்-மந்திரிக்கு சரத்பவார் ஆலோசனைகளை வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நிவாரணங்கள் வழங்குவது, மந்திரி சபை இறுதி செய்து உள்ள மேல்-சபை உறுப்பினர்களின் பட்டியலை கவர்னர் நிராகரித்தால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் சரத்பவார், உத்தவ் தாக்கரே விவாதித்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story