காங்கேயம் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதல்; 4 பேர் பலி- 2 பேர் படுகாயம்
காங்கேயம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காங்கேயம்,
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் சிகரிபுரா தாலுகா அரிசனஹரை சேர்ந்தவர் மோகன் (வயது 29). இவருடைய நண்பர்கள் அரசிங்கரி ஹோண்டா ரோட்டை சேர்ந்த ஹாலேஷ்(38), வினோபாநகரை சேர்ந்த பரமேஷ் (42), அப்சல் அலி பைக் (22). இவர்கள் சோளம் அடிக்கும் எந்திரம் வாங்க முடிவு செய்தனர். அதன்படி 4 பேரும் ஒரு காரில் கர்நாடகவில் இருந்து தேனிக்கு சோளம் அடிக்கும் எந்திரம் வாங்குவதற்காக வந்தனர். காரை அப்சல் அலி பைக் ஓட்டினார். இவர்களுடைய கார் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் பங்க் அருகே கார் வந்த போது எதிரே ஒரு மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை ஈரோடு மாவட்டம் சின்னசெட்டிபாளையம் அம்மன் நகரை சேர்ந்த பாலன் (42) ஓட்டி வந்தார். பின் இருக்கையில் அவருடைய மனைவி கலைவாணி (37) இருந்தார். இவர்கள் தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கு பின்னால் தேனியிலிருந்து மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்றும் வந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் அலி பைக் ஓட்டிச்சென்ற கார், பாலன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியதுடன் நிற்காமல் அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த மோகன், ஹாலேஷ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த பாலன், அவருடைய மனைவி கலைவாணி மற்றும் காரை ஓட்டி வந்த அப்சல் அலிபைக், பரமேஷ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் பாலன், காரில் வந்த பரமேஷ் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்த கலைவாணிக்கும், காரை ஓட்டி வந்த அப்சல் அலி பைக் என்பவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்சல் அலிபைக் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story