மங்களமேடு அருகே, பஞ்சராகி நின்ற லாரியால் விபத்து; டிரைவர் பலி


மங்களமேடு அருகே, பஞ்சராகி நின்ற லாரியால் விபத்து; டிரைவர் பலி
x
தினத்தந்தி 31 Oct 2020 3:45 AM IST (Updated: 31 Oct 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

மங்களமேடு,

விருத்தாசலத்தை சேர்ந்தவர் சையத்சுபஹான்(வயது 30). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அயன்பேரையூரில் தனியார் பள்ளி அருகே வந்தபோது, லாரி டயர் பஞ்சராகி நின்றுவிட்டது. இதையடுத்து லாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி, டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு லாரி திடீரென்று, நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் அந்த லாரியின் முன்பகுதி நசுங்கியதில், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மன்னார்குடி வட்டம் கலப்பால் கிராமத்தை சேர்ந்த ஜெயநாதன்(25) பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மங்களமேடு போலீசார், இருக்கையிலேயே பிணமாக கிடந்த ஜெயநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story