பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 31 Oct 2020 8:57 AM IST (Updated: 31 Oct 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலை முதலே வந்தனர். இதையடுத்து நேற்று காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இரவு 7 மணிக்கு சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பால், பழம், இளநீர், விபூதி சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுந்தர மகாலிங்கம் சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஐப்பசி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி பூஜை நேற்று இரவு 7 மணி முதல் ஆரம்பித்ததால் குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகலிலேயே சாமி தரிசனம் செய்துவிட்டு பெரும்பாலான பக்தர்கள் திரும்பினர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல்அலுவலர் விசுவநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story