திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 Oct 2020 10:15 PM GMT (Updated: 2020-10-31T09:16:25+05:30)

திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தடுப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கி அங்கே கூடி இருந்த பயணிகளிடையே கொரோனாவின் தாக்கம், பாதுகாப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கூறி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

மேலும் வரும் காலங்களில் பண்டிகை மற்றும் விழாக்களை பாதுகாப்பாக கொண்டாடும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். பின்னர் பயணிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பு, 5 முனை சந்திப்பு, ஏரிக்கரைமுலை, சங்கராபுரம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்க பிரமுகர்கள் மற்றும் கார், ஆட்டோ, வேன் டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அங்குள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் செல்வம் கலந்துகொண்டு முககவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்தும், வீட்டை விட்டு வெளியே வரும்போது, வாகனங்களில் பயணிக்கும்போதும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் எனவும், முககவசம் அணியாமல் வருபவர்களை வாகனங்களில் ஏற்றக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சுந்தர்ராஜன், வியாபார சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது.

அதேபோல் திருக்கோவிலூரை அடுத்துள்ள கண்டாச்சிபுரத்தில் கொரோனா தடுப்பு குறித்து வியாபார சங்க பிரமுகர்கள், கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல், விழிப்புணர்வு கூட்டம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் ஆகியோர் கொரோனா நோயின் தாக்கம், பாதிப்பு மற்றும் நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கி பேசினார்கள்.

மேலும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பாதுகாப்பான முறையில் விழாவை கொண்டாடுவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்கம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் எம்.தனபால்ராஜ், கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயதுர்காதேவி, கிராம நிர்வாக அலுவலர் சின்னதுரை மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அனந்தராமன் நன்றி கூறினார்.

Next Story