குடமுருட்டி ஆற்றுப்பாசன பகுதியில் போதிய தண்ணீர் இன்றி சம்பா சாகுபடி செய்த வயலில் வெடிப்பு
குடமுருட்டி ஆற்றுப்பாசன பகுதியில் போதிய தண்ணீர் இன்றி சம்பா சாகுபடி செய்த வயலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் தண்ணீர் செல்வதுடன் அவ்வப்போது மழையும் பெய்வதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்டேரில் சம்பா, தாளடி பணி முடிவடைந்துள்ளது.மற்ற பகுதிகளிலும் சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் 100 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. 7 ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 7 ஆயிரத்து 683 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து இருந்து காவிரியில் 1,010 கனஅடியும், வெண்ணாற்றில் 2,204 கனஅடியும், கல்லணைக்கால்வாயில் 2,704 கனஅடியும், கொள்ளிடத்தில் 402 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு உள்ளிட்ட கிளை ஆறுகளில் செல்லக்கூடிய தண்ணீரின் அளவு மிக குறைவாக தான் உள்ளது.
இதனால் கிளை ஆறுகளில் இருந்து கால்வாய் மூலம் வயல்களுக்கு தண்ணீர் செல்வது சில பகுதிகளில் தடைபட்டுள்ளது. இதன்காரணமாக குடமுருட்டி பாசன பகுதிகளான மேலத்திருப்பூந்துருத்தி, திருவலாம்பொழில் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த வயல்கள் எல்லாம் தண்ணீர் இன்றி வெடிக்க தொடங்கிவிட்டது. இன்னும் 1 வாரத்திற்குள் தண்ணீர் கிடைக்காவிட்டால் பயிர்கள் காய்ந்துவிடும் நிலை உள்ளது. இதனால் குடமுருட்டி ஆற்றில் கூடுதல் அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
இது குறித்து மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த சுகுமாரன் கூறும்போது, குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளியதால் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. ஆற்றில் 2,600 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் குறைந்தஅளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் செல்லும். ஆற்றில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் வராது. தடுப்பணை கட்டப்பட்ட பகுதிகளில் மட்டும் ஆற்றில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் செல்லும். இல்லையென்றால் மின்மோட்டார் வைத்து தான் தண்ணீர் எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் 100 அடிக்கு தண்ணீர் இருப்பதால் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். 22 நாட்கள் ஆன சம்பா பயிரை காப்பாற்ற ஏக்கருக்கு ரூ.1000 வரை செலவு செய்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை இறைக்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஏற்கனவே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் தண்ணீர் குறைவாக திறந்துவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story