வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: கடிதம் எழுதி வைத்து விட்டு வங்கி அதிகாரி தற்கொலை - நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்த பரிதாபம்


வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: கடிதம் எழுதி வைத்து விட்டு வங்கி அதிகாரி தற்கொலை - நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 31 Oct 2020 5:45 AM GMT (Updated: 31 Oct 2020 6:37 AM GMT)

வேலை கிடைத்தால் உயிரை தருவதாக கடவுளிடம் வேண்டி கொண்டதால், அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ரெயில் முன்பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாகர்கோவில்,

நாகர்கோவில் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்காடு பகுதியை சேர்ந்த செல்லசாமி மகன் நவீன் (வயது 32) என்பது தெரிய வந்தது. இவர் என்ஜினீயரிங் படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் நவீனுக்கு மும்பையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக வேலை கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று, அந்த வங்கியின் உதவி மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நவீன் மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்த அவர் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே சென்று, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சோகமான தகவல் தெரியவந்தது.

அதே சமயத்தில், நவீனின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். தற்கொலை செய்வதற்கான காரணத்தை நவீன் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். அது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது அந்த கடிதத்தில், நான் படித்து விட்டு பல இடங்களில் வேலை தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எனக்கு வேலை கிடைத்தால், என் உயிரையே நேர்த்திக் கடனாக தருகிறேன் என கடவுளிடம் வேண்டியிருந்தேன். தற்போது எனக்கு வேலை கிடைத்துள்ளது, எனவே நான் வேண்டியபடி எனது உயிரை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நவீனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேலை கிடைத்ததற்காக கடவுளுக்கு தன் உயிரையே நேர்த்திக்கடன் அளிப்பதாக கடிதம் எழுதி விட்டு வங்கி உதவி மேலாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story