கோலார் தங்கவயல் நகரசபை தலைவராக வள்ளல் வி.முனிசாமி தேர்வு துணை தலைவி-தேவி


கோலார் தங்கவயல் நகரசபை தலைவராக வள்ளல் வி.முனிசாமி தேர்வு துணை தலைவி-தேவி
x
தினத்தந்தி 1 Nov 2020 4:30 AM IST (Updated: 1 Nov 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் நகரசபை தலைவராக வள்ளல் வி.முனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவியாக தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் நகரசபையின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. நகரசபை தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கும், துணைத்தலைவர் பதவி பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள், சுயேச்சைகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள், இந்திய குடியரசு கட்சி உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 24 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் நகரசபை தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியானது.

ஆனாலும், காங்கிரஸ் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் 24 பேர், குதிரைபேரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக கோலாரில் உள்ள ரெசார்டில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று கோலார் தங்கவயல் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக கோலார் மாவட்ட உதவி கலெக்டர் சோமசேகர் இருந்தார். நேற்று காலை காங்கிரஸ் ஆதரவு உறுப்பினர்கள் ரெசார்ட்டில் இருந்து அழைத்து வரப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தலுக்கு 4 பேர் இடையே போட்டி இருந்தது.

ஆனால், தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபகலா சசிதர் தலைமையில் இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டதால், அவர் கைகாட்டும் நபரே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நகரசபை தலைவர், துணைத்தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதால், பா.ஜனதா மற்றும் இந்திய குடியரசு கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதனால், தங்கவயல் நகரசபை தலைவராக வள்ளல் வி.முனிசாமியும், துணைத்தலைவியாக தேவியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story