புதுச்சேரி மக்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தரமாட்டார்கள் விடுதலை நாள் செய்தியில் நாராயணசாமி உறுதி


புதுச்சேரி மக்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தரமாட்டார்கள் விடுதலை நாள் செய்தியில் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 1 Nov 2020 3:53 AM IST (Updated: 1 Nov 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மக்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள் என்று விடுதலை நாள் செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை விடுதலை நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தின் விடுதலை திருநாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிற உன்னத தருணம் இதுவாகும். அன்னிய தேசத்தவர் நம்மை அடிமைப்படுத்தி இருந்தபோது அதனை எதிர்த்து நம் மாநில விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் எழுச்சியுடன் போராடி விடுதலையெனும் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை நமக்கு அளித்த நாள் இந்த பொன்னாள்.

இது புதுச்சேரி விடுதலைக்காக மட்டும் போராடிய நாள் அல்ல. மாநிலத்தை இந்திய தேசத்துடன் இணைத்து தேசிய நீரோட்டத்தில் நாம் கலக்கும் முடிவினையும் எடுத்த நாளாகும். நாம் இந்தியாவோடு இணைந்தபோது பிரதமராக இருந்த நேரு காலந்தொட்டு மத்தியில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் உரிமைகள் மதிக்கப்பட்டன. பிரெஞ்சு ஜன்னலாக விளங்கிய புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டது.

ஆனால் இன்று நம் தனித்தன்மைக்கும் உரிமைகளுக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சிலரின் செயல்பாடுகள் உள்ளன. நம் போராட்ட வரலாற்றினை அறியாதவர்களுக்கு இந்த நாள் ஒரு பாடமாக விளங்கும். உரிமைகளை விட்டுத்தர ஒருநாளும் புதுச்சேரி மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், தங்கள் மாநில நலனுக்காக எத்தகு தியாகத்தினையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்பதையும் இந்த விடுதலை நாள் எடுத்துக்காட்டுகிறது.

நம் மாநில விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் அனைவருக்கும் இந்த திருநாளில் என்னுடைய வீர வணக்கங் களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நலனில் புதுச்சேரி அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை கவுரவிக்கும் வகையில் தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதியினை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு இந்த தொகை அவர் களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியின் வரலாற்றினை நம் குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை நாம் எடுத்துரைக்கவேண்டும். போராடி நாம்பெற்ற சுதந்திரத்தை யாரிடமும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை நம்மை அடிமைகளாக ஆக்க துடிப்பவர்களுக்கு புரிய வைப்போம். புதுச்சேரி மக்கள் யாருக்கும் அஞ்சுபவர்கள் இல்லை. ஆனால் நாகரிகம் அறிந்தவர்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விடுதலை நாளில் புதுச்சேரியின் தனித்தன்மையை காப்போம். அதற்காக எத்தகு தியாகத்தினையும் செய்ய தயாராக இருப்போம் என்று சூளுரைப்போம். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story