15 நாட்களுக்குள் சட்டப்படி காவலர் தேர்வு நடத்த வேண்டும் மாணவர்களுக்கு சமூக நீதி கிடைக்க போராட தயாராக உள்ளேன் ப.கண்ணன் பேச்சு


15 நாட்களுக்குள் சட்டப்படி காவலர் தேர்வு நடத்த வேண்டும் மாணவர்களுக்கு சமூக நீதி கிடைக்க போராட தயாராக உள்ளேன் ப.கண்ணன் பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2020 4:06 AM IST (Updated: 1 Nov 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு சமூக நீதி கிடைக்க நானும் போராட தயாராக உள்ளேன், 15 நாட்களுக்குள் சட்டப்படி காவலர் தேர்வு நடத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் ப.கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி புதுச்சேரி காமராஜர் சிலை அருகே மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ப.கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் பேசியதாவது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தற்போது அதற்கு சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு தான் காரணம். மாணவர்களின் இடஒதுக்கீடு பிரச்சினையில் அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு மாநில கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியிலும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும்.

புதுவை மாணவர்களுக்கு சமூக நீதி கிடைக்க நானும் போராட தயாராக உள்ளேன். புதுவை அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. வியாபாரம் இல்லை. மாமூல் கேட்டு வியாபாரிகள் மிரட்டப்படுகிறார்கள்.

புதுச்சேரியில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்ட அனைத்து ஆலைகளும், தொழிற்சாலைகளும் ஒரு ஆண்டில் திறக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். காவலர் தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கவர்னர் அறிவித்துள்ளார். இந்த தேர்வை சட்டப்படி 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும். இல்லையென்றால் புதுவை மாநிலம் ஸ்தம்பிக்கும் அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

புதுச்சேரியில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ரவுடித்தனம், அராஜகத்திற்கு காவல்துறை உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். புதுவையில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளியையொட்டி ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அதற்காக நான் ரூ.20 லட்சத்தை வழங்க தயாராக உள்ளேன். இவர் அவர் பேசினார்.

Next Story