நவீன மயமானது காசிமேடு மீன் மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சி
சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன்பிடி ஏல சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பெரிய படகுகள் மூலம் மீன்கள் கொண்டுவரப்பட்டு, மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அருகே மீன்பிடி துறைமுக வளாகத்திலேயே சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிறிய ரக படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சில்லரை விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படும் பகுதியில் இடநெருக்கடி, மேற்கூரை அமைக்கப்படாததால் வெயில், மழையில் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து ரூ.10½ கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உலகத்தரத்தில் நவீன மீன் விற்பனையகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்தது. இதற்காக சில்லறை விலை மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் ராட்சத மேற்கூரைகளுடன் கூடிய மீன் விற்பனையகம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. அதேபோல மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் வெயில், மழையில் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவாக ராட்சத குடைகளும் அமைக்கப்பட்டன.
இந்த பணிகள் முழுவதும் கடந்த வாரம் முழுமையடைந்தது. இந்த விற்பனையகத்தில் சுமார் 308 கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்பு வழங்கினார்.
பணிகள் நிறைவடைந்த நிலையில் காசிமேடு நவீன மீன் விற்பனையகத்தில் உள்ள கடைகளில் மீன் விற்பனை தொடங்கி இருக்கிறது.
இத்தனை நாட்களாக கடும் வெயிலிலும், மழையிலும் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் தற்போது பாதுகாப்பாக மீன் விற்பனையில் ஈடுபட்டதை பார்க்க முடிகிறது. தனித்தனியாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் விரும்பும் கடைகளில் கூட்ட நெரிசலின்றி மீன்கள் வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக நிழற்கூரைகளில் உள்ள கடைகளில் மீன் வாங்குவதால் வெயில், மழையில் இருந்து பொதுமக்களும் தப்பித்து கொள்ளலாம்.
இந்த நவீனமயத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகப்பகுதியே புதுமையாக காட்சியளிக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு, குறிப்பாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் சுப்புலட்சுமி, அஞ்சலை ஆகியோர் கூறியதாவது:-
காசிமேட்டில் இதுவரை கூட்ட நெரிசலிலும், வெயில்- மழை பிரச்சினையிலும் சிக்கி வியாபாரிகள் நாங்கள் பெரிதும் கவலைப்படுவோம். சில சமயம் கடும் வெப்பத்தால் மயக்கமும் அடைந்திருக்கிறோம். ஆனால் தற்போது அந்த சிக்கல் இல்லை. வியாபாரத்தை முடித்து இங்கேயே நிழலில் சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுத்துவிட்டும் செல்கிறோம். வியாபாரிகளின் நலனுக்காக தமிழக அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், இந்த நவீன விற்பனையகம் அமைய மூலகாரணமாக இருந்த அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதேவேளை வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறைகளையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீன் வியாபாரி பழனிசாமி கூறுகையில், “இந்த நவீன மீன்கள் விற்பனையகம் இந்த இடத்துக்கே ஒரு அந்தஸ்தை கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடம் இன்னும் அழகாக தெரிகிறது. மாலை நேரங்களில் மீனவர்களுக்கு வசதியாக நிறைய மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது நிச்சயம் மீனவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனளிக்கக்கூடிய ஒன்று தான். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்”, என்றார்.

Related Tags :
Next Story