அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி கே.எஸ்.அழகிரி பேட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருச்சி,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள காந்தி சிலை முன்பு சத்தியாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமை தாங்கினார். முன்னாள் மேயர் சுஜாதா, தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜான்அசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஆர்.சுதா, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சுப.சோமு ஆகியோர் பேசினர். இதில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறியாளர் பிரிவு தலைவர் என்ஜினீயர் கணபதி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணகுமாரிகணபதி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மண்ணச்சநல்லூர் கிழக்கு வட்டார தலைவர் தென்றல் கார்த்திக் வரவேற்றார். இறுதியில் மேற்கு வட்டார தலைவர் ரவிசங்கர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
தமிழகத்தில் வாள் யாத்திரையும், வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும்போது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். பா.ஜ.க.வின் கையில் இருக்கும்போது ரத்தம் சிந்தக் கூடியதாக மாறும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்திருந்தார். அதை மாநில அரசு 7.5 சதவீதமாக மாற்றியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி 45 நாட்களாகியும் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அதை சட்டமாக இயற்றலாம். ஆனால் அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொள்ளவில்லை. புதுச்சேரி அரசு 10 சதவீதம் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, அதனைப் பின்பற்றி அ.தி.மு.க. அரசு செய்துள்ளது. அதன்பிறகு கவர்னர் அழுத்தம் தாங்காமல் ஒப்புதல் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வெற்றி
இதில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மதசார்பற்ற கூட்டணியை ஆதரிக்கிறார்களா?. பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கிறார்களா? என மக்களின் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ.க., அ.தி.மு.க. பின்தங்கிய நிலையில் உள்ளது. காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க.வை வைத்து பா.ஜ.க. காலூன்ற முயன்று நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டு சேர்ந்தது. ஆனால் அ.தி.மு.க.வின் கால்களும் உடைந்தது. அ.தி.மு.க.விற்கு கால் இல்லாத நிலையில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பது இயலாது. பா.ஜ.க.வில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்த நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்கள் ஜொலிக்க முடியாது. தொல்.திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தவில்லை. மாறாக மனுதர்மத்தில் பெண்களைப்பற்றி கூறப்பட்டிருப்பதை மறு பதிவு செய்திருக்கிறார். ஆகையால் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. இதனால் தோழமை கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story