நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை


நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
x

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை, 

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலில் ஐப்பசி திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்ததால், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாலை 5 மணி அளவில் காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

11-ந் தேதி திருக்கல்யாணம்

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. சுவாமி-அம்பாள் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திலேயே நடத்தப்படுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் 12-ம் திருநாளான வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

வழக்கமாக காட்சி மண்டபத்தில் நடைபெறும் தபசு காட்சி நிகழ்ச்சியானது, கோவில் உள்பிரகாரத்தில் நடத்தப்படுமா? அல்லது காட்சி மண்டபத்தில் நடத்தப்படுமா? என்பது பின்னர் அறிவிக்கப்படும். கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப் இணையதளம் வழியாகவும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதேபோன்று பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 



Next Story