ஓட்டப்பிடாரம் அருகே ரூ.60½ லட்சத்தில் குடிநீர் திட்டப்பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரம் அருகே ரூ.60½ லட்சத்தில் குடிநீர் திட்டப்பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Nov 2020 8:06 AM IST (Updated: 1 Nov 2020 8:06 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.60½ லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை, அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பஞ்சாயத்தை சேர்ந்த பசுவந்தனை, ஆலிபச்சேரி, தெற்கு கைலாசபுரம், வடக்கு கைலாசபுரம் ஆகிய கிராமங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. பசுவந்தனை சிவன் கோவில் அருகில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது ரூ.60 லட்சத்து 46 ஆயிரத்தில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு, மேல்நிலை தொட்டி, ஆழ்துளைக்கிணறு ஆகிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் முத்து, பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் லட்சுமி சிதம்பரம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எலிசபெத்மேரி, யூனியன் ஆணையாளர்கள் ஹெலன் பொன்மணி, வளர்மதி, யூனியன் உதவி பொறியாளர் வெள்ளைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மார்க்கெட்டில் ஆய்வு

கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமின்றி, நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதில் அங்குள்ள கடைகளில் இருந்த காய்கறிகள், மாளிகை பொருட்கள் ஆகியவை மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தினசரி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், “மழைநீர் வணிக நிறுவனங்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக 12 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் 80 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் மழைநீர் தினசரி சந்தைக்குள் சென்றுள்ளது. தகவல் கிடைத்ததும் தினசரி சந்தையில் ஆய்வு மேற்கொண்டேன். இனிமேல் இதுபோன்று நடக்காமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

இந்த ஆய்வின்போது தாசில்தார் மணிகண்டன், நகரசபை சுகாதார அதிகாரி இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராஜன், தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் பால்ராஜ், கடைக்காரர் பாஸ்கரன் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர்.

நலத்திட்ட உதவி

கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் சவுபாக்கியா மஹாலில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் தலைவர் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கலைச்செல்வன், மாநில பொருளாளர் கார்த்திக்ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் அமல்ராஜ், மாவட்ட தலைவர் துரை பாண்டியன், மாவட்ட செயலாளர் வேம்பு பாண்டியன், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், தொழில் அதிபர் பரத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 5 பேருக்கு தேய்ப்பு எந்திரமும், 4 பெண்களுக்கு தையல் எந்திரமும், 250 பேருக்கு சேலைகளும் வழங்கினார். நிகழ்ச்சியை ஒட்டி 1000 பேருக்கு அன்னதான நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேவர் சிலைக்கு மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கருங்குளம் வடக்கு ஒன்றிய சார்பில் வல்லநாட்டில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணபெருமாள், தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story