பா.ஜ.க. வேல் யாத்திரையில் மதத்தை வைத்து பிரசாரம் செய்யக்கூடாது ஆர்.நல்லகண்ணு பேட்டி
பா.ஜ.க. வேல் யாத்திரையில் மதத்தை வைத்து பிரசாரம் செய்யக்கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் ரோட்டில் ஜீவா இல்லம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார்.
விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு ஏ.ஐ.டி.யு.சி. கொடியேற்றி வைத்து பேசினார்.
விழாவில் நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு, தொழிற்சங்கத்தை சேர்ந்த குருசாமி, பரமராஜ் ஜோசப் பால்பாண்டி, ராமகிருஷ்ணன், அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் ஆர்.நல்லகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பது தான் அரசமைப்பின் அடிப்படை திட்டம். இந்த திட்டத்தை மறுக்கவோ, மாற்றமோ வரக்கூடாது. பா.ஜ.க. வேல் யாத்திரை நடத்துவது அவர்களது கொள்கை. ஆனால் மதத்தை வைத்து பிரசாரம் செய்யக்கூடாது. எங்களது மதச்சார்பற்ற கூட்டணி, பா.ஜ.க. எதிர்ப்பு கூட்டணி உறுதியாக உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் தான் எத்தனை தொகுதிகள் எங்களுக்கு என முடிவெடுக்கப்படும். எங்களது கோரிக்கை என்பது ஒன்றுபட்டு போராடுவது.
கோவில்பட்டி தொகுதியை இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட கேட்போம். ஆனால் பேச்சுவார்த்தையில் தான் உறுதி செய்யப்படும். தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு அரசு கட்டமைப்பு பற்றி கவலையில்லை. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. அவர்கள் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, சட்டம் என்ன இருக்கிறது. அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற கவலை இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story