நாகையில் மீண்டும் களைகட்டிய இறால் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி


நாகையில் மீண்டும் களைகட்டிய இறால் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Nov 2020 8:46 AM IST (Updated: 1 Nov 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மீண்டும் களை கட்டிய இறால் ஏற்றுமதியால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இங்கிருந்து தினமும் ஏராளமான மீன்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள்தோறும் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும் பண்ணை இறால் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. கடற்கரையோரங்கள், கடலும், ஆறும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளில் பண்ணை இறால் உற்பத்தி நடைபெறும். நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை சுமார் 2 ஆயிரம் எக்டேரில் இறால் பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் டன் வரை இறால் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு

சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நாகை மாவட்டத்தில் இருந்து இறால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக உள்நாட்டு மற்றும் பன்நாட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால், இறால் உற்பத்தி முடங்கியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து நாகை மாவட்ட இறால் பண்ணைகளுக்கு ஆர்டர் கிடைக்காததால், ஏற்றுமதி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வந்தனர். எனவே உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் உள்ளூர் சந்தைகளில் இறாலை விற்பனை செய்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளதால், வெளிமாநிலங்களுக்கு இறால் ஏற்றுமதி களைகட்ட தொடங்கி உள்ளது.

முடக்கம்

இது குறித்து நாகை பகுதி இறால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

நாகை அருகே பாப்பாகோவில், கிராமத்துமேடு, சின்னத்தும்பூர், செருதூர், திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இறால் பண்ணைகள் உள்ளன. இங்கு வனாமி ரக இறால் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இறால்களுக்கு, தீவனம், மருந்து, மின்சாரம், ஆட்கூலி உள்ளிட்ட பராமரிப்பு தேவைகளுக்காக ரூ.7 லட்சம் வரை செலவிடப்படுகிறது. 90 முதல் 120 நாட்கள் வரை வளர்க்கப்படும் இந்த வனாமி ரக இறால்கள் ஏக்கருக்கு 4 டன்கள் வரை கிடைக்கிறது. ஒரு கிலோ சிறிய இறால்கள் ரூ.240-ல் இருந்து ரூ.280 வரையும், பெரிய இறால்கள் ஒரு கிலோ ரூ.450-ல் இருந்து ரூ.500 வரையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, வெளிநாட்டு ஏற்றுமதி முற்றிலும் முடங்கியது.

வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி

இதனால் உள்ளூர் சந்தைகளில் குறைந்த விலைக்கு இறால்களை விற்பனை செய்து வந்தோம். இதனால் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இறால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் படிப்படியான தளர்வுகள் அளிக் கப்பட்டதாலும் போக்குவரத்து தொடங்கியுள்ளதாலும், தற்போது கேரளா, பெங்களூரு, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இறால் ஏற்றுமதி செய்கிறோம். தற்போது ஒரு கிலோ இறால் ரூ.280-க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இறால் உற்பத்தி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story