சுற்றுலாதலங்களில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர்ராஜூ பதில்
சுற்றுலாதலங்களில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என்பதற்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ பதில் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி,
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த குமரி மாவட்டப் பகுதிகள், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. இதையொட்டி நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மார்ஷல் நேசமணி. இதனால் இவர் குமரித்தந்தை என்று மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். மேலும், இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குமரி இணைப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரிக்கு வருகை
இதையொட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று இரவு 8.30 மணியளவில் கார் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். அவருக்கு அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். கோவிலில் அம்மனுக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் புஷ்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர்ராஜூ, தளவாய்சுந்தரம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அமைச்சரை கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ. அசோகன், ஜாண்தங்கம், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் சதாசிவம், கன்னியாகுமரி நகர அ.தி.மு.க. செயலாளர் வில்சன், நிர்வாகிகள் சுகுமாரன், மணிகண்டன், தாமரை தினேஷ், கைலாசம், ஜெசீம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
கன்னியாகுமரிக்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்ஷல் நேசமணி முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழக அரசு நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணிக்கு மணி மண்டபம் கட்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை கொண்டு நடத்தலாம் என அரசு அனுமதி அளித்தது. அத்துடன் வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா தலங்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.
மோடி பாராட்டு
கொரோனா தடுப்பு பணிகளை செயல்படுத்தியதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கியதாக பிரதமர் மோடி பாராட்டினார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story