வாடகைக்கு வாகனம் அமர்த்த வசதியில்லாததால் உறவினர்களுடன் 70 கி.மீ. தூரம் பஸ்சில் பயணம் செய்த மணமகன்-மணமகள்


வாடகைக்கு வாகனம் அமர்த்த வசதியில்லாததால் உறவினர்களுடன் 70 கி.மீ. தூரம் பஸ்சில் பயணம் செய்த மணமகன்-மணமகள்
x

வாடகைக்கு வாகனம் அமர்த்த வசதியில்லாததால் 70 கி.மீ. தூரம் உறவினர்களுடன் பஸ்சில் மணமகனும், மணமகளும் பயணம் செய்தனர். அவர்களுக்கு திருநங்கைகள் ஆசி வழங்கினர்.

சத்தியமங்கலம், 

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை முடித்துப்பார் என்ற சொல் வழங்கி வருகிறது. வசதியானவர்கள் ஆடம்பரமாகவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எளிமையாகவும் திருமணத்தை நடத்தி வருகிறார்கள். வாடகைக்கு கார், பஸ் பிடித்து உறவினர்களுடன் மணமகள் வீட்டுக்கு சென்று வருவதுண்டு.

ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவர், திருமணத்துக்கு காரோ, வேனோ, பஸ்சோ வாடகைக்கு அமர்த்த வசதியில்லாததால் பஸ்சில் உறவினர்களை அழைத்து சென்று திருமணத்தை நடத்தியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

70 கி.மீ. தூரம்

ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் மேகநாதன் (வயது 30). ஆட்டோ டிரைவர். சத்தியமங்கலம் அருகே உள்ள நஞ்சப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மாரியம்மாள் (28). இவருக்கும், மேகநாதனுக்கும் நேற்று முன்தினம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ஈரோட்டில் இருந்து நஞ்சப்ப கவுண்டன்புதூர் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் மேகநாதனுக்கு உறவினர்களை திருமணத்துக்கு நஞ்சப்பகவுண்டன்புதூர் அழைத்து செல்ல வாடகைக்காரோ மற்றும் வேன் வசதியோ செய்து கொடுக்க முடியவில்லை.

பஸ்சில் பயணம்

இதைத்தொடர்ந்து அவர் உறவினர்களை பஸ்சில் அழைத்து செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று முன்தினம் பகல் ஈரோட்டில் இருந்து தனது உறவினர்கள் சிலருடன் அரசு பஸ்சில் ஏறி சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்றார். பின்னர் அங்கு இறங்கி வேறு பஸ்சில் ஏறி அனைவரும் நஞ்சப்பகவுண்டன்புதூரில் உள்ள மணமகள் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு மேகநாதனுக்கும், மாரியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் மணமக்கள் உறவினர்களுடன் ஈரோடு புறப்படுவதற்காக சத்தியமங்கலம் பஸ் நிலையம் வந்தனர். அங்கிருந்த திருநங்கைகள் மணமக்களுக்கு ஆசி வழங்கினர். இதனை அங்கு நின்றிருந்த பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அதன்பின்னர் உறவினர்களுடன் மணமக்கள் வேறு பஸ் ஏறி ஈரோடு வந்தடைந்தனர். 

Next Story