2021-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வரை கன்னட வளர்ச்சி ஆண்டாக கொண்டாட திட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


2021-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வரை கன்னட வளர்ச்சி ஆண்டாக கொண்டாட திட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2020 10:00 PM GMT (Updated: 1 Nov 2020 8:17 PM GMT)

2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை கன்னட வளர்ச்சி ஆண்டாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு கன்டீரவா உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 65-வது கர்நாடக ராஜ்யோத்சவா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இதில், முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். அப்போது அவர், தேசிய மற்றும் மாநில கொடிகளை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

நாம் தினமும் பேசும் உரையாடல்களில் கன்னடத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளிடமும் கன்னடத்திலேயே பேசவேண்டும். அது கன்னட மொழியை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு எளிமையாக்கும். மொழியை பேசுவதன் மூலமாக தான் கன்னடத்தை காப்பாற்ற முடியும். கன்னடமொழியை காப்பாற்றவும், வளர்க்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கன்னட மொழியை காப்பாற்றுவதே அரசின் முழு நோக்கமாகும்.

இதற்காக அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 31-ந் தேதிவரை கன்னட மொழி வளர்ச்சி ஆண்டாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் கன்னடமொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இதற்காக திட்டம் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். கூடிய விரைவில் அந்த திட்டம் என்ன? என்பது குறித்து அறிவிக்கப்படும்.

தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டு இருக்கிறோம். எனவே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கன்னட மொழியை காப்பாற்றி, வளர்ப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுக்கப்படும். கன்னடமொழி நிலைத்திருக்கவும், அதனை வளர்த்தெடுக்கவும் கன்னடத்தை நம் வாழ்வின் ஒரு அங்கமாக்கிக்கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் மட்டும் கன்னடர்களாக இருந்து விடக்கூடாது.

ஆண்டு முழுவதும் கன்னடர்களாக வாழவேண்டும். கன்னட மொழியை வளர்க்கும் பணியில் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கையில் தாய் மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கன்னட பயிற்று மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கிடைக்கும். எந்தமொழியாக இருந்தாலும், அதற்கு என்று தனி அழகு இருக்கும். அதனை காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நமது மாநிலத்தை நாட்டின் முன் மாதிரி மாநிலமாக்கப்படும். இதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அறிஞர்கள், நிபுணர்களின் ஆலோசனையை பெற்று மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கிறோம். கர்நாடகம் உருவாக காரணமாக இருந்தவர்கள், ஒட்டுமொத்த கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை நினைத்து பார்க்க வேண்டும். கொரோனாவால் நமது பொருளாதாரம், சமூக கட்டமைப்பு முழுமையாக மாறிவிட்டது. அரசும், மக்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் கொரோனாவை தைரியமாக எதிர்கொள்ள முடியும். கொரோனாவை கண்டு யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே போதும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கொரோனாவில் இருந்து கூடிய விரைவில் நாம் விடுபடுவோம். மாநிலத்தில் உண்டான வெள்ள பாதிப்புகளை அரசு திறம்பட கையாண்டது. வெள்ள பாதிப்பு, வறட்சி, கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட அரசுக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ராஜ்யோத்சவா தினத்தன்று நாட்டு மக்களுக்கு சாமுண்டீஸ்வரி தேவி நிம்மதி, உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்படி வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story