அமலோற்பவம் பள்ளி சார்பில் அமல் விஷன் செயலி அறிமுகம்


அமலோற்பவம் பள்ளி சார்பில் அமல் விஷன் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 2 Nov 2020 4:09 AM IST (Updated: 2 Nov 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

அமலோற்பவம் பள்ளி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அமல் விஷன் செயலியை பள்ளி தாளாளர் லூர்துசாமி வெளியிட்டார்.

புதுச்சேரி,

புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி ஆகியன இணைந்து அமல் விஷன் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை அமலோற்பவம் கல்விக்குழும நிறுவனரும், தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்துசாமி வெளியிட்டார். இன்றைய காலசூழலில் வீட்டில் இருந்தபடியே இணையவழிக்கல்வி கற்க இந்த புதிய செயலி உறுதுணையாக இருக்கும்.

இந்த செயலியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் யூ-டியூப்பில் ஒரு வீடியோவை காண்பதற்கு 750 முதல் 800 எம்.பி. செலவாகிறது. ஆனால் அதே காணொலியை இந்த செயலி வாயிலாக காண 200 முதல் 250 எம்.பி. மட்டுமே தேவைப்படும். தரமான வீடியோ கோப்புகளை மிகக்குறைவான டேட்டா செலவில் இடையூறின்றி காணமுடியும். இதனால் பெற்றோர்கள் தங்கள் மொபைல் டேட்டாவை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும். காணொலி சேகரிப்புகள் மூலம் சேகரித்து வைத்து எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

இந்த செயலி மாணவர்களின் பங்கேற்பு மற்றும் பயன்படுத்துதலை மிகவும் துல்லியமாக கணக்கிடுகிறது. மாணவர்கள் எவ்வளவு நேரம், எத்தனை முறை பார்க்கின்றனர்? எந்த அளவுக்கு இதனை பயன்படுத்தி வருகின்றனர்? என்பதையும் பள்ளி நிர்வாகத்தினால் அறிந்துகொள்ள முடியும். ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களின் சந்தேகங்களை அகற்றிக்கொள்ள இந்த செயலி பயன்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக சுலபமாக கற்க இந்த செயலியை இக்கல்வி நிறுவனம் தயார் செய்துள்ளது. பள்ளியின் தனிப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அமல் விஷன் செயலி மாணவர்கள் அனைவரும் தடையின்றி கல்வி கற்க ஏதுவாக இருக்கும்.

இந்திய கல்வி வரலாற்றிலேயே அமல் விஷன் செயலி மிகச்சிறந்த கல்வி கற்கும் செயலியாக திகழும் என்று கல்விக்குழுமத்தின் நிறுவனர், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வரான லூர்துசாமி தெரிவித்தார்.

Next Story