7 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்


7 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 1 Nov 2020 10:45 PM GMT (Updated: 1 Nov 2020 10:45 PM GMT)

7 மாதங்களுக்கு பிறகு புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டன.

புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. அதன்பின்பு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் புதுவை மாநிலத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில் தமிழக அரசு பஸ்கள் புதுவை எல்லையான கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை பகுதிகள் வரை வந்து சென்றன.

சென்னையில் இருந்து சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் புதுவை வழியாக இயக்கப்பட்டன. ஆனால் அந்த பஸ்களை புதுவை பகுதிக்குள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதனால் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு செல்பவர்களும், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கும், தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார்.

இதைதொடர்ந்து நேற்று முதல் புதுச்சேரியில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழக பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. அதேபோல் தமிழக அரசு பஸ்களும் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்து சென்றன. புதுவை பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திண்டிவனம், கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ்கள் பழுதுபார்ப்பு, இன்சூரன்சு புதுப்பிப்பு பணிகள் நிறைவடையாததால் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் முழு அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Next Story