16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Nov 2020 6:45 AM IST (Updated: 2 Nov 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஆடியபாதம் சீதாலட்சுமி, மோகன்தாஸ், சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணன் வரவேற்றார். இதில் மாநில துணைத்தலைவர் பிரகாஷ் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய மாற்றத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஊதிய குழு அமைத்து நடப்பாண்டில் ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத 500 பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும்.

எடையாளர் நியமனம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பணியாளர்கள் முன்பு கட்டுப்பாட்டு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும். கூட்டுறவு துறையில் ஏற்படும் லாப, நஷ்டத்துக்கு விற்பனையாளர் காரணம் இல்லாததால் 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்த பணியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தி, தரமான விற்பனை முனையம் வழங்க வேண்டும். நெட்வொர்க் மற்றும் சர்வர் பிரச்சினைகளை சீர்செய்து, விழித்திரை அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.

மருத்துவப்படி

கடைகளில் இருப்பு அதிகமாக இருக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு 3 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். பெண் பணியாளர்களை அவமானப்படுத்தும் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவு செய்கின்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மருத்துவப்படி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட கிளை தலைவர் ரமணராம் நன்றி கூறினார்.

Next Story