தஞ்சை மாவட்டத்தில், 4 இடங்களில் தமிழ்நாடு தினம் கொண்டாடிய 41 பேர் கைது


தஞ்சை மாவட்டத்தில், 4 இடங்களில் தமிழ்நாடு தினம் கொண்டாடிய 41 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2020 6:50 AM IST (Updated: 2 Nov 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் தமிழ்நாடு தினம் கொண்டாடிய 41 பேர் கைது செய்யப்பட்டனர். கொடி, இனிப்புகளையும் போலீசார் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர், 

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது. இதன் 64-ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையத்தின் பின்புறமுள்ள அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது.

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தமிழ்நாட்டின் தொழில், வணிகங்களில், வேலை தமிழர்களுக்கே, வெளி மாநிலத்தவரை வேலைக்கு சேர்க்காதீர், வெளிமாநிலத்தவர் கடை, நிறுவனங்களில் பொருட்களை வாங்காதீர் என தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியாக பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கி பரப்புரை செய்யப்பட்டது.

தமிழ் தேசிய பேரியக்கத்தின் மாநகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வைகறை, தலைமைக்குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், நிர்வாகிகள் ஜெயக்குமார், துரைப்பாண்டி, அப்பணமுத்து, அண்ணாதுரை உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழர் தேசிய முன்னணி

இதேபோல தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழர் தேசிய முன்னணி சார்பில் நடந்த தமிழ்நாடு தின விழாவில், தமிழ்நாட்டில் வேலையுரிமை தமிழருக்கே, தமிழ்நாட்டு பொருளியல் உரிமை தமிழருக்கே, தமிழ்நாடு தமிழருக்கே, தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச்செயலர் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சந்திரகுமார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடி, இனிப்புகளை அள்ளிச்சென்றனர்

தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு தின விழாவை கொண்டாடுவதற்காக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் தலைமையில் கொடி, இனிப்புகளுடன் 3 பேர் வந்தனர். அப்போது அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கொடி, இனிப்புகளையும் போலீசார் அள்ளிச்சென்றனர்.

அம்மாபேட்டை நான்கு சாலை சந்திப்பில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் தமிழ்நாடு கொடியை கையில் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story