கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அஞ்சலி
கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடைபெற்றது. அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 72).
தமிழக வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்து வந்த துரைக்கண்ணுவுக்கு கடந்த மாதம் 13-ந் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்்.
மரணம்
இதனைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நுரையீரலில் 50 சதவீதம் தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் நேற்றுமுன்தினம் அமைச்சர் துரைக்கண்ணுவின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து மோசம் அடைந்ததால் நவீன உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு மரணம் அடைந்தார்.
எடப்பாடி பழனிசாமி மரியாதை
அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 6.45 மணி அளவில் தனியார் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
முதல்-அமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
குடும்பத்தினர் கதறல்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரி கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பிற்பகல் 1 மணி அளவில் அமைச்சரின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் ராஜகிரியில் உள்ள அமைச்சர் வீட்டை அடைந்தது. அந்த வீட்டின் முன்பு சில நிமிடங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வைக்கப்பட்டது.
துரைக்கண்ணுவின் உடலைப் பார்த்து அவரது மனைவி, மகள்கள், மகன்கள் மற்றும் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ராஜகிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள அய்யனார் கோவில் திடலுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆம்புலன்சில் இருந்து துரைக்கண்ணுவின் உடல் தாங்கி இருந்த கண்ணாடி பேழையை சுகாதார துறையினர் உதவியுடன் கீழே இறக்கப்பட்டு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்த மேடையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் மூவர்ண கொடி போர்த்தப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம்- அமைச்சர்கள்
பின்னர், மேடையில் இருந்து 10 அடி தொலைவில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் படத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி எம்.பி., ரவீந்திரநாத் குமார் எம்.பி., சி.வி.சேகர் எம்.எல்.ஏ., விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் கோவிந்தராவ், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன் மற்றும் நிர்வாகிகள், வன்னியர் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
தொடர்ந்து பிற்பகல் 2.50 மணி வரை அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவரது உடல் மீண்டும் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு ஊர்வலமாக ராஜகிரி அருகே உள்ள வன்னியடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் துரைக்கண்ணுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கொரோனா விதிமுறைப்படியும், அரசு மரியாதையுடனும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது 21 போலீசார், மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மொத்தம் 63 குண்டுகள் முழக்கத்துடனும், முழு அரசு மரியாதையுடனும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் நடந்தது.
Related Tags :
Next Story