டாக்டர் தற்கொலை விவகாரம்: போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரி தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்


டாக்டர் தற்கொலை விவகாரம்: போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரி தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2020 1:43 AM GMT (Updated: 2 Nov 2020 1:43 AM GMT)

டாக்டரை தற்கொலைக்கு தூண்டிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பறக்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலை அடுத்த இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராமபெருமாள் (வயது 43), தி.மு.க. மருத்துவர் அணி துணை அமைப்பாளர். இவர் பறக்கை பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் உள்ள ஓய்வு அறையில் சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிவராம பெருமாள் எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில், தனது சாவிற்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரிதான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சிவராமபெருமாளின் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி குமரி மாவட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் நேற்று பறக்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் வட்டார தலைவர் அசோக்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும்போது, டாக்டர் சிவராம பெருமாள் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூத், ராஜன், வக்கீல் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

Next Story