ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து தமிழ்நாடு தினம் கொண்டாட அனுமதி கேட்ட 15 பேர் கைது
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து தமிழ்நாடு தினம் கொண்டாட அனுமதி கேட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
இந்தியாவில் 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த தினத்தை தமிழ்நாடு தினமாக கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
ஈரோட்டில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில், தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு வரைபடத்துடன் கூடிய புதிய கொடியை ஏற்ற போவதாகவும் அவர்கள் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் தடை விதித்ததோடு, ஈரோடு மாவட்டத்தில் இதுபோல் கொடி ஏற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
15 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் வீடுகளுக்கு போலீசார் நேரடியாக சென்று நோட்டீஸ் வழங்கினர். இந்தநிலையில் நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டனர். அவர்கள் தமிழ்நாடு வரைபடத்துடன் கூடிய கொடியை ஏற்றாமல், பெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அதற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் பெரியாரிய உணர்வாளர்கள் சந்தித்து முறையிடுவதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களுக்கு அனுமதி மறுத்ததோடு 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அருகில் இருந்த ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் 2 நுழைவு வாயில் பகுதியில் ஒரு நுழைவு வாயில் மூடப்பட்டது. பின்னர் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story