பூலாங்குறிச்சியில் காணப்படும் களப்பிரர் கால கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க கோரிக்கை + "||" + Request to preserve the Kalabhira period inscriptions found in Poolankurichi as an archeological symbol
பூலாங்குறிச்சியில் காணப்படும் களப்பிரர் கால கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் காணப்படும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைசேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதை செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வருகிறது. இந்த கல்வெட்டை கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:-
இந்த கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு என்று தெரிகிறது. இதில் உள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப்பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி) , திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாக கூறுகிறது.
பழமையான கல்வெட்டு
இவற்றிற்கு வேண்டியதை செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகை திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது.
கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறை கல்வெட்டுக்கு இணையான சிறப்புக் கொண்டது.
தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான இந்த கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு பாதிக்காத வகையில் கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.