மேலூர் அருகே கீழே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்


மேலூர் அருகே கீழே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Nov 2020 5:27 AM GMT (Updated: 2 Nov 2020 5:27 AM GMT)

மேலூர் அருகே மேலவளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலூர், 

மேலூர் அருகே மேலவளவில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சரியாக நிலை நிறுத்தப்படாமல் பக்கவாட்டில் சாய்ந்து எந்த நேரத்திலும் விழுந்து உயிர் பலியை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின் கம்பங்களை சரி செய்ய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் தும்பைபட்டியில் இருந்து கைலம்பட்டி செல்லும் ரோட்டின் பக்கவாட்டில் மின்கம்பம் சாய்ந்து மின் வினியோகம் நிறுத்தாமல் மின்கம்பிகள் தரையில் ஆபத்தான நிலையில் கிடக்கின்றன. அ.வல்லாளபட்டி, சண்முகநாதபுரம், கிடாரிப்பட்டி, சாம்பிராணிபட்டி, புலிப்பட்டி, மேலவளவு, சென்னகரம்பட்டி, தும்பைபட்டி, தாமரைப்பட்டி, அய்யர்பட்டி, அரிட்டாபட்டி, டி.வெள்ளாலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன.

பொதுமக்கள் அச்சம்

கடந்த பல ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த மேலவளவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மேலவளவு துணை மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் சாய்ந்து உயிர் பலிகள் உண்டாக்கும் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை சரிசெய்யாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.

அரசு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தபோதிலும் மின் கம்பங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Next Story