தியாகதுருகத்தில் இனிப்பு கடை ஊழியர் கொலை வழக்கில் விபசார அழகி கைது பரபரப்பு வாக்குமூலம்


தியாகதுருகத்தில் இனிப்பு கடை ஊழியர் கொலை வழக்கில் விபசார அழகி கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Nov 2020 11:43 AM IST (Updated: 2 Nov 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் மர்மமான முறையில் இறந்த இனிப்பு கடை ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக விபசார அழகியை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிமங்கலம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 40). இவர் கள்ளக்குறிச்சி அருகே ரோடுமா.மாந்தூரில் உள்ள இனிப்பு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பழனிசாமி, கடந்த மாதம் 28-ந் தேதி தியாகதுருகம் பிரிதிவிமங்கலம் ஏரியில் உள்ள ஒரு கருவேல மரத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் விரைந்து சென்று பழனிசாமியின் உடலை பார்வையிட்டனர். அவரது கழுத்தில் காயம் இருந்தது. எனவே அவரை யாரேனும் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விபசார அழகிகளுடன் தொடர்பு

மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், திருமால், நந்தகோபால், கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஏரிக்கு சென்று, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று பழனிசாமி, ஒரு பெண்ணுடன் அமர்ந்து மது குடித்துக்கொண்டே பிரியாணி சாப்பிட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பழனிசாமி வேலை பார்த்த இனிப்பு கடையில் அவருடன் வேலை செய்த ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு விபசார அழகிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதியில் விபசார அழகிகளிடம் விசாரித்தனர்.

மதுவில் தூக்க மாத்திரை கலந்து...

விசாரணையில், ஏரியில் பழனிசாமியுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட விபசார அழகி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கோமதி(45) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பழனிசாமியை கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், பழனிசாமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் விபசார தொழில் செய்து வருகிறேன். என்னுடன் வரும் ஆண்களுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுப்பேன். சிறிது நேரத்தில் அவர்கள் தூங்கியதும், பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்று விடுவேன். சம்பவத்தன்று நான், கள்ளக்குறிச்சியில் பழனிசாமியை சந்தித்தேன். பின்னர் அவரை உல்லாசமாக இருப்பதற்கு பிரிதிவிமங்கலம் ஏரிக்கு அழைத்து வந்தேன்.

முந்தானையால் கழுத்தை இறுக்கி...

பின்னர் நானும், பழனிசாமியும் கருவேலமரத்தின் அடியில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான், அவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அதை குடித்து வெகு நேரமாகியும், அவர் தூங்கவில்லை.

உடனே தனது சேலை முந்தானையால் பழனிசாமியின் கழுத்தை இறுக்கி, கொலை செய்தேன். பின்னர் அவரது செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை திருடிவிட்டு சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கோமதி, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story