கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு, தனியார் பஸ்கள் ஓடின முக கவசம் அணிந்தபடி பயணிகள் சென்றனர்


கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு, தனியார் பஸ்கள் ஓடின முக கவசம் அணிந்தபடி பயணிகள் சென்றனர்
x
தினத்தந்தி 2 Nov 2020 11:45 AM IST (Updated: 2 Nov 2020 11:45 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு, தனியார் பஸ்கள் ஓடின. இதில் முக கவசம் அணிந்தபடி பயணிகள் சென்று வந்தனர்.

கடலூர், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு, தனியார் பஸ்களை இயக்க உத்தரவிட்டது. இதன்படி அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் தனியார் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தனியார் பஸ்கள், வெளி மாவட்டங்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன.

முதல்-அமைச்சர் உத்தரவு

இருப்பினும் பிற மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. தொடர்ந்து புதுச்சேரி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டதால், கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை, திண்டிவனத்திற்கு பஸ்கள் ஓடின. ஆனால் புதுச்சேரியில் பஸ்கள் நிற்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரிக்குள் தமிழக பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரிக்கு பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.

புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கம்

அதன்படி கடலூரில் இருந்து நேற்று அரசு பஸ்கள் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தது. இருப்பினும் அதில் பயணிகள் முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர். இந்த பஸ்கள் புதுச்சேரி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது.

இது பற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு உத்தரவுபடி கடலூரில் இருந்து புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு செல்லும் 12 பஸ்கள், சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனம் செல்லும் 24 பஸ்கள், சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் 16 பஸ்கள், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக கும்பகோணம் செல்லும் 3 பஸ்கள் என அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் தான் பயணிகள் பயணம் செய்தனர். முக கவசம் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற அனுமதிக்கவில்லை என்றார்.

7 மாதங்களுக்கு பிறகு

அதேவேளை கடந்த 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் ஓடின. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வழக்கமாக 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் நேற்று 10-க்கும் குறைவான தனியார் பஸ்களே இயக்கப்பட்டன. இதுபற்றி தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், தமிழக அரசு திடீரென புதுச்சேரிக்கு பஸ்களை இயக்க உத்தரவிட்டதால், பஸ்களை உடனடியாக தயார் செய்து இயக்க முடியவில்லை. இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து தனியார் பஸ்களையும் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Next Story