என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகைகளை திருடிய வாலிபர் கைது
நொய்யல் அருகே என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நடையனூர் இளங்கோநகரை சேர்ந்தவர் பாலகுமாரன் (வயது 35). இவர் புகளூர் காகித ஆலையில் கடந்த சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவசெல்வி (34). இவர்களுக்கு ரக்சன்யா (8), மகிழ்முத்ரா (2 ½) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் பாலகுமாரனின் தந்தை வீட்டிற்கு அருகில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 31-ந்தேதி மாலை சிவசெல்வி கரூர் காளியப்பனூரிலுள்ள தனது தாய் வீட்டிற்கு இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை பாலகுமாரன் புகளூர் காகித ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் தனது தாய் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது பாலகுமாரன் வசிக்கும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.
15½ பவுன் நகைகள் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகுமாரன் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் உள்ளே இருந்துள்ளனர். இவரைப் பார்த்ததும், மர்மநபர்கள் 2 பேரும் தங்களது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி பாலகுமாரனை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து கொண்டு வெளியே ஓடி வந்த பாலகுமாரன் சுற்றுச்சுவரின் கேட்டின் கதவை பூட்டியுள்ளார்.
இதைப்பார்த்த மர்ம நபர்கள் 2 பேரும் பீரோவை உடைத்து, அதில் இருந்த சுமார் 15½ பவுன் நகைகளை திருடி கொண்டு, சுற்றுச்சுவரை தாண்டி குதித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன், பாலகுமாரன் அதில் ஒருவனை பிடித்து விட்டார். மற்றொருவன் 15½ பவுன் நகைகளுடன் வாழை தோப்புக்குள் புகுந்து தப்பித்து சென்று விட்டார். இதனையறிந்து இவர்களுக்காக ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொருவரும் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.
வாலிபர் கைது
இதையடுத்து பிடிபட்ட நபரை பாலமுருகன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் சென்னை கூட்டுரோடு சத்திரம் பகுதியை சேர்ந்த மதி என்பவரது மகன் விஜய் (20) என்பதும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகே உள்ள ஒரு பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயை போலீசார் கைது செய்தனர்.
மேலும் நகைகளுடன் தப்பியோடியவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசார் என்பதும், மோட்டார் சைக்கிளுடன் நின்றவர் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story