கேரள-குமரி எல்லையில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் நவீன சோதனை சாவடிகள்
கேரள-குமரி எல்லையில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் நவீன சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் திறந்து வைத்தார்.
களியக்காவிளை,
குமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியில் 38 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கூடாரத்தில் செயல்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளை நவீன படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக களியக்காவிளை, நெட்டா, சூழால், காக்கவிளை போன்ற பகுதிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்களுடன் கட்டுபாட்டு அறை, ஓய்வறை, கழிவறையுடன் கூடிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டு
இந்த சோதனை சாவடிகளை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசந்திரன், குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்ட எல்லை வழியாக நடைபெற்று வரும் கஞ்சா, ரேஷன் அரிசி, கனிம வளங்கள் உள்பட பல்வேறு வகையான கடத்தல்களை தடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சோதனை சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு வாகனங்கள் தொலைவில் இருந்து வரும் போதே பதிவு எண் தெரியும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடத்தலை தடுப்பதுடன், குற்ற சம்பங்கள் குறையும். இதுபோல், எல்லை பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் படிப்படியாக நவீனபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story