நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை கணவர் இறந்த ஓராண்டில் விபரீதம்


நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை கணவர் இறந்த ஓராண்டில் விபரீதம்
x
தினத்தந்தி 3 Nov 2020 7:17 AM IST (Updated: 3 Nov 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கணவர் இறந்த ஒரு ஆண்டில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் நேசமணிநகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32), மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராசி (28). இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அக்‌ஷயா (5), அனுசுயா (3½) என்ற 2 மகள்கள் இருந்தனர். ராசியின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ரஞ்சித்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென உயிரிழந்தார். இதனால் ராசி அதிர்ச்சி அடைந்தார். தாய், தந்தை இல்லாததால் கணவரின் பாசத்தையே எதிர்பார்த்திருந்த அவர், கணவர் இறந்ததால் மனதளவில் மிகவும் உடைந்து போனார்.

நினைவு தினம்

பிறகு ராசி தன் குழந்தைகளுடன் மாமனார் ராமதாஸ் (70) மற்றும் மாமியார் சந்திரா (68) ஆகியோருடன் வசித்து வந்தார். ஆனால் ராமதாசுக்கு போதுமான வருமானம் இல்லை. தினமும் கூலி வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய கட்டாயமும் ராமதாசுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே ரஞ்சித்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 15 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு ரஞ்சித்குமாரின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். நினைவு தினம் முடிந்த பிறகு ராசி மிகவும் சோகத்துடன் இருந்து வந்தார். மேலும் வயதான காலத்தில் ராமதாஸ் தினமும் வேலைக்கு செல்வது பெரும் சவாலாக இருந்துள்ளது. எனவே தனது கஷ்டங்களை அவரும் வீட்டில் கூறி வந்தார். இது ராசியை மேலும் மனவருத்தம் அடைய செய்தது.

2 குழந்தைகள் கொலை

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ராசி, தான் பெற்ற குழந்தைகள் என்றும் பார்க்காமல் மனதை கல்லாக்கி கொண்டு 2 பேருக்கும் தூக்க மாத்திரை கொடுத்தார். இதில் குழந்தைகள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் அவரும் அளவுக்கு தூக்க மாத்திரையை தின்றார். ஆனாலும் தான் பிழைத்து கொள்வோமோ என்று கருதி நேராக கழிவறைக்கு சென்று உடல் மீது வார்னீசை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அவர் உடல் கருகி அந்த இடத்திலேயே பிணமானார்.

அதிர்ச்சி

சத்தம் கேட்டு சென்ற மாமியார் சந்திரா, ராசி உடல் கருகி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார். மேலும், 2 குழந்தைகளும் படுக்கை அறையில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி நேசமணிநகர் போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் இறந்த துக்கம் மற்றும் குடும்ப வறுமை ஆகியவற்றால் மனமுடைந்து காணப்பட்ட ராசி, தன் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

உருக்கமான கடிதம் சிக்கியது

அதைத்தொடர்ந்து ராசியின் படுக்கை அறையில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ராசி எழுதி இருப்பதாவது:-

“நானும், குழந்தைகளும் தூக்க மாத்திரை சாப்பிட்டோம். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இந்த முடிவை உங்களால் தாங்கி கொள்ள இயலாது என்று எனக்கு தெரியும். ஆனாலும் என்னால் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. என்னையும், என் குழந்தைகளையும் என் கணவரிடம் நல்லபடியாக அனுப்பி வையுங்கள்” என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதத்தை ராசி அவருடைய உறவினர்களுக்காக எழுதி உள்ளார். மேலும் தன் தற்கொலை தொடர்பாக செல்போனில் வீடியோவும் பதிவு செய்து வைத்திருப்பதாக அந்த கடிதத்தில் ராசி குறிப்பிட்டு இருந்தார்.

சோகம்

அதைத் தொடர்ந்து செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், “எனக்கு பெற்றோர் இருந்திருந்தால் கூட என்னையும், என் குழந்தைகளையும் இப்படி கவனித்து இருப்பார்களா? என்று தெரியவில்லை. ஆனால் என் கணவர் குடும்பத்தினர் என்னையும், என் குழந்தைகளையும் நன்றாக கவனித்து கொண்டனர். எனவே என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள்” என்று வீடியோவில் ராசி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story