ஆந்திராவிற்கு கடத்த முயற்சி: மினி வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது டிரைவர் கைது


ஆந்திராவிற்கு கடத்த முயற்சி: மினி வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது டிரைவர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2020 8:45 AM IST (Updated: 3 Nov 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மினி லோடு வேனில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திரா நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி லோடு வேனை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ எடைகொண்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

ரேஷன் அரிசி பறிமுதல்

விசாரணையில், அந்த மூட்டைகளை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளத்தில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தப்பி ஓட முயன்ற வேன் டிரைவரான சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 39) என்பவரை மடக்கி பிடித்த போலீசார், அவரையும், ரேஷன் அரிசியுடன் பிடிபட்ட வாகனத்தையும் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story