தனியார் விடுதியில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


தனியார் விடுதியில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Nov 2020 9:18 AM IST (Updated: 3 Nov 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில், 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 34). இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இசக்கிமுத்துவின் தம்பிக்கு இந்த மாத இறுதியில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முத்துலட்சுமி தன்னுடைய குழந்தைகளுடன் சங்கரன்கோவில் அருகே பாம்புகோவில்சந்தையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

தனியார் விடுதியில்...

இதற்கிடையே, இசக்கிமுத்து தனது தம்பியின் திருமணத்துக்காக ஒரு மாத விடுமுறை எடுத்து கொண்டு, ஜம்மு காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலுக்கு வந்த இசக்கிமுத்து தனது வீட்டுக்கு செல்லாமல், சங்கரன்கோவில்-ராஜபாளையம் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார்.

நேற்று முன்தினம் காலையில் இசக்கிமுத்து தங்கியிருந்த விடுதி அறையில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அப்போது அவர் செல்போனில் தன்னுடைய மனைவி முத்துலட்சுமியை தொடர்பு கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, சங்கரன்கோவிலில் உள்ள தன்னுடைய மாமனார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர்கள், அந்த விடுதி அறைக்கு விரைந்து சென்றனர். அங்கு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த இசக்கிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராணுவ வீரர் இசக்கிமுத்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவிலில் தனியார் விடுதியில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story