சிறையில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதியால் பரபரப்பு சுற்றுச்சுவரில் ஏறி நின்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர்
கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. சிறை சுற்றுச்சுவரில் ஏறி நின்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் மூக்காண்டி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 31). கூலி தொழிலாளியான இவர் கடந்த மாதம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்த நபரிடம் 3 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து, நகை-செல்போனை மீட்டனர். பின்னர் சக்திவேலை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
காலை உணவு சாப்பிடும்போது...
கோவில்பட்டி கிளை சிறையானது தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் மைதானம், கோர்ட்டுகள், அரசு ஆஸ்பத்திரி ஆகியவை அமைந்துள்ளன. கோவில்பட்டி கிளை சிறை வளாகத்தில் பழமைவாய்ந்த ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் வழக்கம்போல் கைதிகள் அனைவரையும் காலை உணவு சாப்பிடுவதற்காக அறைகளில் இருந்து திறந்து விட்டனர். தொடர்ந்து கைதிகள் சிறை வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
சுற்றுச்சுவரில் ஏறி...
அப்போது சக்திவேல் நைசாக சிறை வளாகத்தில் சுற்றுச்சுவர் அருகில் உள்ள பழமை வாய்ந்த வேப்ப மரத்தில் ஏறினார். மரத்தின் உச்சிக்கு சென்ற சக்திவேல் அங்கிருந்து சிறையின் சுற்றுச்சுவரில் தாவி குதித்தார். சுமார் 20 அடி உயரமுடைய சுற்றுச்சுவரில் இருந்து வெளியே குதிப்பதற்காக சக்திவேல் தயாரானார்.
அப்போது போலீஸ் மைதானத்தில் இருந்த போலீசார் மற்றும் சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். தொடர்ந்து சிறை காவலர்கள் மற்றும் போலீசார் அந்த மரத்தில் ஏறி, சுற்றுச்சுவரில் நின்ற சக்திவேலை மடக்கி பிடித்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அப்போது சக்திவேலுக்கு உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
எனவே, அவரை போலீசார் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் சக்திவேல் மீண்டும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து கைதி தப்பி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story