சூளகிரி பகுதியில் கடும் விலை வீழ்ச்சியால் ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்


சூளகிரி பகுதியில் கடும் விலை வீழ்ச்சியால் ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்
x
தினத்தந்தி 3 Nov 2020 10:14 AM IST (Updated: 3 Nov 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் கடும் விலை வீழ்ச்சியால் ஏரியில் தக்காளிகளை விவசாயிகள் கொட்டி சென்றனர்.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி விளைவிக்கப்படுகிறது. பின்னர் இவை சூளகிரியில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களுக்கும், கர்நாடகம், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்கப்பட்டது. மேலும், தக்காளி மார்க்கெட்டிலும் 30 கிலோ கொண்ட ஒரு கூடை ரூ.800 வரை விலை போனது. இவ்வாறு உச்ச விலையில் இருந்த தக்காளி விலை கடந்த ஓரிரு நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நோய் தாக்குதல்

30 கிலோ கொண்ட ஒரு கூடை வெறும் 100 ரூபாய்க்கு விலை போகிறது. இதனால் மார்க்கெட்டில் வரவேற்பு இல்லாமல், டன் கணக்கில் தக்காளிகள் ஏரியில் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், தற்போது பருவநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளை நோய் தாக்கி வருகிறது. இதனால், செடிகளிலேயே தக்காளி காய்ந்தும், அழுகி விடுகின்றன.

பொதுவாக தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தாலும் 4 அல்லது 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஆனால் தற்போது 2 நாட்களுக்குள்ளாகவே அவை அழுகி போகின்றன. இதனால் மார்க்கெட்டில் வரவேற்பு குறைந்து விட்டது. ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய ரூ.50,000 வரை செலவாகிறது. ஆனால் தற்போது 1 ஏக்கருக்கு ரூ.5,000 கூட கிடைப்பதில்லை. எனவே, தக்காளி விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அவற்றை ஏரியிலும், சாலையோரத்திலும் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Next Story