தொழில் அதிபர் வீட்டில் 60 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சம் கொள்ளை தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்


தொழில் அதிபர் வீட்டில் 60 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சம் கொள்ளை தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 3 Nov 2020 10:26 AM IST (Updated: 3 Nov 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே தொழில் அதிபர் வீட்டில் 60 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தொடர் கொள்ளை சம்பவங்களால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பள்ளிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அலமேடு கோயிலங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 53). விசைத்தறி தொழில் அதிபர். இவர் தனது மனைவி புஷ்பலதா, மகன் அஸ்விந்த், மகள் சுருதி, மருமகன் சிவராஜ் ஆகியோருடன் அந்தபகுதியில் திருச்செங்கோடு செல்லும் சாலையோரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள அறை ஒன்றில் 2 வேலைக்கார பெண்கள் குடியிருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றனர். பாலசுப்ரமணி, அஸ்விந்த் ஆகியோர் மாடியில் உள்ள வெவ்வேறு அறைகளிலும், சுருதி, சிவராஜ் கீழ் பகுதியில் உள்ள ஒரு அறையிலும் படுத்து தூங்கினர். புஷ்பலதா துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றிருந்தார். இந்த வீட்டில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

நகை, பணம் கொள்ளை

இந்த நிலையில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் 5 பேர் வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களின் வயரை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று, பீரோவை உடைத்தனர். பின்பு அதிலிருந்த 60 பவுன் தங்க நகைகள், ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்தனர்.

இதைத்தொடர்ந்து சுருதி, சிவராஜ் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு அறையின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் அறையின் கதவை தட்டினர். அப்போது உள்ளே இருந்த சுருதி, சிவராஜ் இருவரும் கதவை யார் தட்டுவது? என்று கேட்டனர். அதற்கு மர்ம நபர்கள் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனர்.

மர்மநபர்கள் தப்பியோட்டம்

இதனால் சுருதியும், சிவராஜூம் அச்சமடைந்து செல்போன் மூலம் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த பாலசுப்ரமணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கீழே இறங்கி வருவதற்குள், மர்மநபர்கள் பணம், நகையுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

பின்னர் பாலசுப்ரமணி வீட்டில் சோதனை செய்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், ரவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமாரும் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமராவில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனிடையே கைரேகை, தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து, சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.22 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் அச்சம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியில் விவசாயி ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் 19 பவுன் நகைகள், ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும், அந்த பகுதிகளில் அடிக்கடி நகைப்பறிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story