கோவை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்


கோவை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 3 Nov 2020 5:44 AM GMT (Updated: 3 Nov 2020 5:44 AM GMT)

கோவை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

கோவை,

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வருகிற 16-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட உள்ளன. இந்த மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. பள்ளிகள் திறக்க உள்ளதால் 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கினால்தான் அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை மாணவர்கள் படிக்க முடியும்.

2-ம் பருவ பாடப்புத்தகங்கள்

எனவே 6, 7, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கோவையில் ராஜவீதி துணிவணிகர் சங்க பள்ளி உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அதில் 6, 7-ம் வகுப்புக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்களும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பகுதிக்கான பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்கள் வீதம் வந்து புத்தகங்களை பெற்று சென்றனர். அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி இன்றும்(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு அறிவிக்கும்போது புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story