25 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பிச்சையெடுத்து போராட்டம்
கணக்கீடு குளறுபடியின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 சதவீத தீபாவளி போனஸ் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 14-வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், கணக்கீடு குளறுபடியின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், டீசல், கலெக்ஷன் கேட்டு தொழிலாளர்களை சித்ரவதை செய்யக்கூடாது, தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட அலுவலகங்கள் முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மூர்த்தி, துணை பொதுச்செயலாளர் தயானந்தம், துணைத்தலைவர்கள் பாஸ்கரன், நந்தகோபால், பரசுராமன், ரகோத்தமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு
பின்னர் போராட்டக்குழுவினர், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழையவிடாமல் அங்கிருந்த ஊழியர்கள், அங்குள்ள நுழைவுவாயில் கதவை இழுத்து மூடினர். இதனால் அவர்கள், அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், போக்குவரத்துக்கழக அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அதிகாரிகளின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அங்குள்ள அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் ஒருவரை இறந்தவர் போன்று கீழே படுக்க வைத்து மற்ற தொழிலாளர்கள் அனைவரும் சுற்றிநின்று மேளம் அடித்தும், ஒப்பாரி வைத்தபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது முடிந்ததும் ஒரு துணியை கீழே விரித்துவைத்துக் கொண்டு பிச்சையெடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பேச்சுவார்த்தை
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலரை, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உள்ளே அனுப்பி வைத்தனர். அப்போது அவர்கள், கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகு தொழிலாளர்கள் அனைவரும் நேற்று மாலையில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story