குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை தியாகதுருகத்தில் பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை தியாகதுருகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Nov 2020 5:59 AM GMT (Updated: 3 Nov 2020 5:59 AM GMT)

குடிநீர் வழங்கக்கோரி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள பானையங்கால் கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஊர் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் அன்றாட குடிநீர் தேவைக்காக மணிமுத்தா ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஓரளவு வசதி உள்ளவர்கள் பணம் செலவுசெய்து கேன்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி தேவையை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் ஏழை, ஏளிய குடும்பத்தினர் காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலை இருந்து வருகிறது.

காலி குடங்களுடன் முற்றுகை

இந்த நிலையில் நேற்று சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், பணி மேற்பார்வையாளர் பச்சமுத்து, தனி நபர் கழிப்பறை திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் மணிமுத்தா ஆற்றுப் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே சித்தலூர் வரடியாயி அம்மன் கோவில் அருகே வெட்டப்படுள்ள புதிய கிணற்றிலிருந்து எங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து 15 நாட்களுக்குள் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் தியாகதுருகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story