கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ நர்சுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ நர்சுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தேனி,
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தன்னார்வ நர்சுகள் தொகுப்பூதியம் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்பட்ட தன்னார்வ நர்சுகள் சுமார் 50 பேர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பெருந்தொற்று சூழலில் நோயை கட்டுப்படுத்தவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மூலமாக நர்சுகள் தன்னார்வத்தின் அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்தோம். நாங்கள் பணிபுரிந்த காலத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்துக்கான ஊதியம் மட்டுமே இதுவரை பெற்றுள்ளோம். ஊதியத்தை பொருட்படுத்தாமல் எந்தவித சுணக்கமும் இன்றி பணியாற்றினோம்.
மீண்டும் பணி
கடந்த 31-ந்தேதியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எங்கள் அனைவரையும் பணிக்கு வரவேண்டாம் என்றும், பணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு மூலம் அறிவுறுத்தி உள்ளனர். எங்களை பணியில் இருந்து திடீரென நீக்கியது மன வேதனை அளிக்கிறது.
நாங்கள் முன்பு பணியாற்றிய வேலையையும் விட்டுவிட்டு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது பழைய வேலைக்கும் போக முடியவில்லை. எனவே, எங்களை பணியில் இருந்து நீக்காமல், எங்களுக்கு மீண்டும் பணி வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்து மக்கள் கட்சி
அதுபோல், இந்து மக்கள் கட்சியின் தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மணிகண்டபிரபு என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தாக்கியுள்ளனர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
எனவே, தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும். சனாதன தர்மத்தையும், இந்து தமிழ் பெண்களையும் அவமதித்து பேசிய திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story